பொங்கல் பண்டிகை செலவுக்காக பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது
பொங்கல் பண்டிகை செலவுக்காக பொதுமக்களை மிரட்டி நகை, பணம் பறிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை ஏரிக்கரை சர்வீஸ் சாலையில் நேற்று மதியம் மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் அமர்ந்து பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முல்லைவேந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலு, தலைமை காவலர்கள் சாந்தகுமார், செல்லையா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு ஆட்டோவில் மறைந்து இருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
5 பேர் கைது
அதில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் (வயது 25), பட்டாபிராமைச் சேர்ந்த சுகுமாரன் (26), உதயகுமார் (26), பாலமுருகன் (26), அம்ஜித் (31) என்பது தெரிந்தது.
மேலும் இவர்கள், பொங்கல் பண்டிகை செலவுக்காக அந்த வழியாக வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story