வடபழனியில் போலீசார் பறிமுதல் செய்த கார் தீப்பிடித்து எரிந்தது


வடபழனியில் போலீசார் பறிமுதல் செய்த கார் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 10 Jan 2019 11:30 PM GMT (Updated: 10 Jan 2019 7:54 PM GMT)

வடபழனியில் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்து இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பூந்தமல்லி,

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மாதரசன்(வயது 27). சொந்தமாக கார் வைத்துள்ள இவர், அதனை சென்னையில் தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் இணைத்து அவரே ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மாதரசன், வாடிக்கையாளரை ஏற்றிச்செல்வதற்காக வடபழனி 100 அடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வடபழனி போக்குவரத்து போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரை ஓட்டிவந்த மாதரசன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கார் பறிமுதல்

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை பறிமுதல் செய்து வடபழனி 100 அடி சாலையில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழே நிறுத்தி வைத்தனர்.

அப்போது மாதரசன், தான் அவசரமாக ஒரு வாடிக்கையாளரை ஏற்றிச்செல்ல வேண்டும். எனவே காரை தன்னிடம் ஒப்படைக்கும்படி போலீசாரிடம் கேட்டார்.

ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் காரை அவரிடம் ஒப்படைக்க போலீசார் மறுத்து விட்டனர்.

தீப்பிடித்து எரிந்தது

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அந்த காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி அதில் இருந்த தண்ணீரை கொண்டு காரில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் காரின் முன்பகுதி சிறிது எரிந்து நாசமானது.

இதுபற்றி வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்கள் யாராவது காருக்கு தீ வைத்து எரித்தனரா? என்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story