எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு


எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2019 4:30 AM IST (Updated: 11 Jan 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்தார். இதையடுத்து குமரகுரு எம்.எல்.ஏ. நேற்று கள்ளக்குறிச்சி நகர கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாவட்ட மகளிரணி தலைவி அழகுவேல்பாபு ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பஸ்நிலையம் வரை ஊர்வலமாக சென்ற குமரகுரு எம்.எல்.ஏ. அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவினார். இதையடுத்து அண்ணா, எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி மன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார். இதையடுத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் காமராஜ் எம்.பி., மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட மருத்துவரணி பொருளாளர் டாக்டர்.குமரேசன், வக்கீலணி மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் ஞானவேல், வக்கீல் பிரிவு சங்க செயலாளர் சீனுவாசன், விழுப்புரம்-கடலூர் சரக நெசவாளர்கள் கூட்டறவு சங்கங்களின் இணையம் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் அரசு, அய்யப்பா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story