பாராளுமன்ற தேர்தலில் ‘மாநில கட்சிகள் கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்’ வைகோ பேட்டி


பாராளுமன்ற தேர்தலில் ‘மாநில கட்சிகள் கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்’ வைகோ பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 8:13 PM GMT)

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வைகோ கூறினார்.

நெல்லை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது. வாஜ்பாய் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர். ஆனால் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். மேலும் மக்களிடையே இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து பாலைவனமாக்க திட்டமிட்டு உள்ளார். தமிழக மக்களுக்கு நல்ல திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. அழிக்கக்கூடிய திட்டங்களை தான் கொண்டு வருகிறார். இதற்கு தமிழக அரசு உதவியாக உள்ளது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். அதன்மூலம் அண்ணா, கருணாநிதி கண்ட மாநில சுயாட்சியும், சமூக நீதி பாதுகாப்பும் கிடைக்கும். மோடி மீது விவசாயிகளும், வியாபாரிகளும் வெறுப்பில் உள்ளனர். எனவே பாரதீய ஜனதா கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் 144 இடங்கள் கூட கிடைக்காது. படுதோல்வி அடையும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு எதிரான திட்டங்களையே நடைமுறைப்படுத்தி விட்டு, தற்போது மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற தந்திரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்து உள்ளார். மக்கள் அவரை பற்றி நன்றாக புரிந்து வைத்து உள்ளனர். அவருடைய ஆட்சி 2019-ம் ஆண்டு இறுதி வரை நடக்குமா என்பதே சந்தேகம்தான்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட செயலாளர்கள் நிஜாம், தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story