பெங்களூரு விமான நிலையம், ரூ.13 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் தலைமை செயல் அதிகாரி பேட்டி
பெங்களூரு விமான நிலையம், ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று தலைமை செயல் அதிகாரி கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு சர்வதேச விமான நிலைய தலைமை செயல் அதிகாரி ஹரிமரர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாதிரி போக்குவரத்து நிலையம்
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ரூ.13 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. ரூ.3,500 கோடி செலவில் புதிய முனையம் அமைக்கப்படுகிறது.
மேலும் 2-வது ஓடுதளம், தொடர்பு சாலைகளை மேம்படுத்துவது, வளாக சாலைகளை மேம்படுத்துதல், பயன்பாட்டு வசதிகள் மற்றும் ஒரு பன்முக மாதிரி போக்குவரத்து நிலையம் அமைக்கப்படுகிறது. ரூ.13 ஆயிரம் கோடியில் ரூ.2,000 கோடி வட்டியும் அடக்கம்.
லாபத்தை பெறவில்லை
இந்த தொகையில் 80 சதவீதம், வங்கிகள் மூலம் கடன் பெறப்படும். 20 சதவீதம் நாங்கள் சொந்த ஆதாரங்கள் மூலம் நிதியை திரட்ட முடிவு செய்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் வந்த லாபத்தில் 92 சதவீதத்தை விமான நிலையமே வைத்துக் கொண்டுள்ளது. அந்த லாபத்தின் ஈவுத்தொகையை பங்குதாரர்களுக்கு வழங்கவில்லை.
முதலீடு செய்தவர்கள் எந்த லாபத்தையும் பெறவில்லை. விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக லாபத்தொகை முழுவதையும் விமான நிலைய நிர்வாகமே வைத்துக்கொண்டுள்ளது. இந்த விமான நிலைய மேம்பாட்டு பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
இதன் மூலம் மேலும் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது விமான நிலையத்தில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். புதிய ஓடுதளம், குறைந்த செலவில் தரமான முறையில் பொறுப்புடன் அமைக்கப்படும்.
புதிய முனையம், அனைத்து வகையிலும் உலக தரத்தில் அமையும். பகல் நேரங்களில் மின்சார பயன்பாட்டை முழுமையாக தடுக்க உள்ளோம். இதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய உள்ளோம்.
சூரியசக்தி மின்சாரம்
முனையம் மீது இருந்து சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எங்களின் சொந்த ஆதாரங்கள் மூலம் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story