ரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
ரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்திற்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி பண்டப்பா காசம்பூர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு சில்க்போர்டு-கே.ஆர்.புரம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திருத்தப்பட்ட திட்டத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பீடு ரூ.5,994 கோடி ஆகும். இதன் முந்்தைய மதிப்பீடு ரூ.4,202 கோடி ஆகும். சல்லகட்டாவில் ரூ.140 கோடி செலவில் மெட்ரோ ரெயில் நிலையம் நிறுவப்படும்.
மெட்ரோ ரெயில் திட்டம்
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்பு வசதியை ஏற்படுத்த மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அந்த மாற்றத்தின்படி நாகவாரா, ஹெப்பால், ஜக்கூர் மூலம் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும். இதன் நீளம் 38 கிலோ மீட்டர் ஆகும். இதற்கு ரூ.5,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கன்வாடிக்கு கல்வி உபகரணங்கள்
மலை குருபா(பெட்ட குருபா) சாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி உபகரணங்களை வாங்க ரூ.19.77 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
சிக்கமகளூரு-ஹாசன்-சக்லேஷ்புரா வழியில் ரெயில் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரெயில் பாதை அமைக்கும் செலவை மத்திய-மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வீதம் ஏற்றுக்கொள்ளும்.
புறநகர் ரெயில் திட்டம்
500 விவசாய உற்பத்தி மையங்கள் அமைக்க ரூ.300 கோடி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கெங்கேரி-ஒயிட்பீல்டு இடையே, பெங்களூரு சிட்டி-யஷ்வந்தபுரம்-ராஜானுகுன்ேட, நெலமங்களா-சிக்கபானவாரா-பையப்பனஹள்ளி, ஈலலிகே-பையப்பனஹள்ளி-தேவனஹள்ளி வழியாக இந்த புறநகர் ரெயில்கள் இயங்கும்.
மேலும் ஓசூர்-தொட்டபள்ளாபுரா, வசந்தநரசபுரா-துமகூரு- பையப்பனஹள்ளி, ராமநகர்-ஞானபாரதி, ஒயிட்பீல்டு-பங்காருபேட்டை இடையே இந்த புறநகர் ெரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவாகும்.
60 சதவீத கடன்
இந்த நிதியில் மத்திய-மாநில அரசுகள் தலா 20 சதவீதமும், மீதமுள்ள 60 சதவீத நிதி கடன் மூலமும் திரட்டப்பட உள்ளது. கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தற்காலிக தலைவராக சடாக்ஷரிசாமியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. 1,000 கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பண்டப்பா காசம்பூர் கூறினார்.
Related Tags :
Next Story