சிதம்பரத்தில், குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் - போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தகவல்
சிதம்பரத்தில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் நகர போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த சிறிய கட்டிடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் இயங்கி வந்தது. அடிப்படை வசதியில்லாமல், இடநெருக்கடியில் இயங்கி வந்த அந்த போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி நகர போலீஸ் நிலைய வளாகத்திலேயே ரூ.58 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து புதிய போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி, போலீஸ் நிலையத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வநாயகம், தனிப்பிரிவு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, தழிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளர்கள் ரகு,ராஜாமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி தெரு, காந்தி சிலை, அண்ணாமலை நகர் மேம்பாலம், தெற்கு வீதி, கஞ்சித்தொட்டி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சிக்னல்கள் அமைக்கப்படும். சிதம்பரத்தில் குற்றங்களை தடுக்கவும், முக்கிய வீதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். சிதம்பரம் 4 வீதிகளில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ஆட்டோக்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கி கொடுக்கப்படும். உரிய சான்றுகள் இல்லாமல் ஓடும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story