பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் சாவு: பஸ் டிரைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் சாவு: பஸ் டிரைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 4:00 AM IST (Updated: 11 Jan 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

புனேயில், பஸ்சை கடத்தி தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் பலியான வழக்கில், பஸ் டிரைவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

மும்பை

புனே சவர்கேட் பஸ் டெப்போவில் சதாரா நோக்கி செல்லும் அரசு பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அரசு பஸ் டிரைவரான சந்தோஷ் மானே என்பவர், பணியில் இல்லாதபோது அந்த பஸ்சை கடத்திச்சென்றார். பஸ்சை கண்மூடித்தனமாக தாறுமாறாக ஓட்டினார்.

இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில், சாலையில் சென்ற வாகனங்கள், நடந்து சென்றவர்களை அந்த பஸ் மோதி தள்ளிவிட்டு சென்றது.

போலீசார் அந்த பஸ்சை விரட்டி பிடிக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. எனவே துப்பாக்கியால் பஸ் டயரை நோக்கி சுட்டனர். இதனை தொடர்ந்து டயர் வெடித்து பஸ் நிலை தடுமாறி நின்றது. இதனிடையே, பஸ் மோதியதில் 9 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சந்தோஷ் மானேயை கைது செய்து, புனே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

இந்த வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு, பணியில் இல்லாதபோது பஸ்சை கடத்தி சென்று சாலையில் செல்பவர்களை கொலை செய்யும் நோக்கில் டிரைவர் சந்தோஷ் மானே செயல்பட்டதாக கருதியது. எனவே அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சந்தோஷ் மானே மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதில், கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதிசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2015-ம் ஆண்டு அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

அப்போது, சந்தோஷ் மானேக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Next Story