கோட்டையூர், நெற்குப்பையில் கடைகளில் அதிகாரிகள் சோதனை


கோட்டையூர், நெற்குப்பையில் கடைகளில் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 10 Jan 2019 10:32 PM GMT (Updated: 10 Jan 2019 10:32 PM GMT)

கோட்டையூர், நெற்குப்பை பேரூராட்சிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்து பயன்பாட்டுக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

காரைக்குடி, 

கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கவுஸ்முகைதீன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், சுகாதார அதிகாரி அழகப்பன் மற்றும் போலீசார் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். ஸ்ரீராம் நகர், எழில் நகர், திருச்சி ரோடு, அழகாபுரி கடை வீதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஓட்டல், பார், இறைச்சிக்கடை போன்றவற்றில் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கி அறிவுரை கூறினர். மேலும் இந்த விற்பனை நிலை தொடர்ந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து, அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

நெற்குப்பை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்து செயல் அலுவலர் மகாலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பேரூராட்சிக்குட்பட்ட வணிக வளாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கறிக்கடை, காய்கறிக்கடை, துணிக்கடை, ஓட்டல்கள், சாலையோரக்கடை ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் போலீசார் ஈடுபட்டனர்.

அதில் நெற்குப்பை நகர் பகுதிகளான ராஜவீதி, வேந்தன்பட்டி ரோடு, எல்.எப்.ரோடு, மண்டு கருப்பர் கோவில் தெரு, பெரியா மருதிபட்டி, பெரியகடை வீதி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் பிளாஸ்டிக்கிற்கு, மாற்றாகப் பயன்படுத்திய மெழுகுப் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மேரிசசிகலா, சுகாதார ஆய்வாளர் தீனதயாளன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இளநிலை உதவியாளர் சேரலாதன் உள்பட பேரூராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Next Story