கோவை ஏல மையத்தில் ரூ.3.39 கோடிக்கு தேயிலை விற்பனை
கோவை ஏல மையத்தில் தேயிலைத்தூள் மற்றும் இலை ரக தேயிலை ரூ.3 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 149-க்கு ஏலம் போனது.
கோவை,
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் மின்னணு முறையில் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான தேயிலையை ஏலம் எடுத்து வருகிறார்கள். இதன்படி இந்த ஆண்டில் நடைபெற்ற 2-வது ஏல விவரம் வருமாறு:-
இந்த ஏலத்துக்கு 2 லட்சத்து 98 ஆயிரத்து 832 கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 598 கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 75 சதவீதம் ஆகும். 51 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு கிலோ தேயிலைத்தூள் 108 ரூபாய் 52 காசுக்கு ஏலம் போனது. ஆனால் கடந்த வாரம் ஒரு கிலோ 108 ரூபாய் 59 காசுக்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு 7 காசு விலை குறைந்தது. மொத்தம் ரூ.2 கோடியே 42 லட்சத்து 64 ஆயிரத்து 855-க்கு தேயிலை தூள் ஏலம் போனது.
இதேபோல் இலை ரக தேயிலை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 554 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 93 ஆயிரத்து 983 கிலோ ஏலம் போனது. இது 74 சதவீதம் ஆகும். இதில் 36 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலையின் விலை 102 ரூபாய் 66 காசு ஆகும். இது கடந்த வாரம் ரூ.100.23 காசு ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் இலை ரக தேயிலை விலை கிலோவுக்கு ரூ. 2.43 காசு அதிகரித்தது. இந்த வாரம் ரூ.96 லட்சத்து 48 ஆயிரத்து 294-க்கு இலை ரக தேயிலை ஏலம் போனது.
இந்த ஏலத்தில் மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 581 கிலோ தேயிலைத்தூள் மற்றும் இலைரக தேயிலை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 149 ஆகும்.
மேற்கண்ட தகவல் கோவை தேயிலை ஏல மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story