பொங்கல் பண்டிகையையொட்டி, புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் கால்நடைகளுக்கான கயிறு விற்பனை தீவிரம்


பொங்கல் பண்டிகையையொட்டி, புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் கால்நடைகளுக்கான கயிறு விற்பனை தீவிரம்
x
தினத்தந்தி 11 Jan 2019 5:21 AM IST (Updated: 11 Jan 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் கால்நடைகளுக்கான கயிறு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை தமிழகத்தின் பொள்ளாச்சிக்கு அடுத்த 2-வது பெரிய சந்தையாக உள்ளது. இந்த சந்தை சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இங்கு புதன்கிழமை தோறும் மாட்டுச்சந்தையும், வியாழக்கிழமை தோறும் பொதுச்சந்தையும் கூடும். இந்த சந்தைக்கு புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் 16-ந் தேதி மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள். அன்று விவசாயிகள் தாங்கள் வைத்துள்ள உழவு மாடு, கறவை மாடு, எருமை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பழைய கயிறுகளை அகற்றிவிட்டு புதிய கயிறு அழகுப்படுத்தி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், மாடுகளுக்கு தேவையான கயிறு விற்பனை புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் தீவிரமடைந்துள்ளது. இதற்காக ஏராளமான கயிறு வகைகள் மற்றும் கழுத்தில் கட்டப்படும் மணிகள் சந்தைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் மூக்கணாங்கயிறு ரூ.5 முதல் ரூ.20 வரைக்கும், கட்டு கயிறு ரூ.30 முதல் ரூ.40 வரையும், தும்புகயிறு ரூ.6 முதல் ரூ.15 வரையும், தலைக்கயிறு ரூ.20 முதல் ரூ.30 வரையும், கழுத்து கயிறு ரூ.20 முதல் ரூ.30 வரையும், சங்கு கயிறு ரூ.20-க்கும், மணியுடன் கூடிய கயிறு ரூ.25-க்கும், கொம்புக்கயிறு ரூ.15 முதல் ரூ.25 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர திருகாணி, மணிகள், சலங்கை, வளையம் உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி மாடுகளுக்கு கொம்புகளை அழகு படுத்துவதற்காக அவற்றை சீவும் பணியும் நடந்து வருகிறது. இதில் சிறிய கொம்புகள் உள்ள மாடுகளுக்கு ரூ.100-ம், பெரிய கொம்புகள் உள்ள மாடுகளுக்கு ரூ.200-ம் கொம்பு சீவுவதற்கு கூலி வாங்குவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story