ராமநாதபுரம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் பெண்கள் திடீர் சாலைமறியல்


ராமநாதபுரம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் பெண்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Jan 2019 12:10 AM GMT (Updated: 11 Jan 2019 12:10 AM GMT)

ராமநாதபுரம் அருகே ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்காததால் பெண்கள் முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ளது சூரங்கோட்டை காலனி. இந்த பகுதியில் உள்ள ரேஷன்கடையில் கே.கே.நகர், களத்தாவூர், மீனாட்சிபுரம், கொட்டகை, சூரங்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவைகளுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்குவதாக அறிவித்து வழங்கி வருகிறது. கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கண்ட ரேஷன்கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை முன்பாக திரண்டனர். காலை முதலே நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென ரேஷன்கடையில் பணம் காலியாகி விட்டதாகவும், மீண்டும் பணம் வந்ததும் வழங்கப்படும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் காலை முதல் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரேஷன்கடையில் இருந்தவர்கள் பணம் இருந்தால்தானே வழங்கமுடியும் என்று கைவிரித்து விட்டனர்.

அந்த ரேஷன்கடையில் மொத்தம் உள்ள சுமார் 720 ரேஷன்கார்டுகளில் 420 பேருக்கு மட்டுமே பணம் உள்ளிட்டவைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. பணம் இருக்கும் அளவிற்கு மட்டும் வழங்கப்படும் என்று மற்றவர்களை ஆரம்பத்திலேயே அனுப்பியிருந்தால் என்ன என்று பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, பணம் வழங்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை சமாதானபடுத்தினர். ரேஷன்கடைக்கு உரிய பணம் பெற்று அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஏற்கனவே சிலருக்கு பணம் வழங்க கோர்ட்டு தடைவிதித்துள்ள நிலையில் தங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இன்றைக்குள் வாங்கிவிட வேண்டும் என ஒட்டுமொத்தமாக அனைவரும் ரேஷன்கடைக்கு வந்ததால் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

Next Story