பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம்: திருப்பூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல்


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம்: திருப்பூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Jan 2019 12:18 AM GMT (Updated: 11 Jan 2019 12:18 AM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி திருப்பூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ரூ.1,000 வழங்குவதில் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்ததால் தங்களுக்கு கிடைக்குமோ?, கிடைக்காதோ? என்ற குழப்பத்தில் நேற்று காலை மாநகரில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்புத்துண்டு ஆகியவை தயார் நிலையில் இருந்தும், ரூ.1,000 கொடுப்பதற்கான பணம் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக ரேஷன் கடைகளுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

காலை 11 மணிக்கு மேல் ரேஷன் கடைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால் அதிகாலை முதல் ரேஷன் கடைகளுக்கு முன்பு காத்திருந்தவர்கள் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் வாக்குவாதம், முற்றுகை செய்தனர். சில ரேஷன் கடைகளுக்கு முன்பு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். போலீசாரிடமும் அங்கிருந்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பிரச்சினை ஏற்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளுக்கு முன்பும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் பெற்று சென்றனர்.

திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துப்புதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் காலை முதல் காத்திருந்தனர். ஆனால் 11 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவில்லை. அதன்பிறகு கடை விற்பனையாளர் வந்து சர்க்கரை மட்டும் பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 கிடையாது என்று தெரிவித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மற்ற மாவட்டங்களில் சர்க்கரை மட்டும் பெறும் ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.1,000 கொடுப்பதாகவும், தங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறியும் மங்கலம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

இதுபோல் காலை 11 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் தாமதப்படுத்துவதாகவும், தங்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்றும் கூறி ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்தவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மத்திய போலீசார் அவர்களிடம் சென்று பேசினார்கள். வங்கியில் இருந்து பணம் எடுத்து ரேஷன் கடைக்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணம் கொடுக்கப்படவில்லை என்றும், பணம் வந்ததும் பட்டுவாடா செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு ரேஷன் கடைக்கு சென்றனர். கே.வி.ஆர்.நகர் பகுதியிலும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி மறியலுக்கு திரண்டனர். அதற்குள் மத்திய போலீசார் அவர்களிடம் பேசி மறியல் செய்யவிடாமல் தடுத்தனர். ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

திருப்பூர் பி.கே.ஆர்.காலனியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி தாராபுரம் ரோடு காங்கேயம் ரோடு சந்திப்பு பகுதியில் ரேஷன்கார்டுதாரர்கள் மதியம் 1 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தெற்கு போலீசார் வந்து சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். ரேஷன் கடையில் தொடர்ந்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் காலேஜ் ரோடு பூத்தார் தியேட்டர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி கடை விற்பனையாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். புதூர் பிரிவில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் போது சிலர், பெண்களை தாக்கியதாக கூறி அங்கிருந்தவர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் கருவம்பாளையத்திலும் பொங்கல் பரிசு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

Next Story