விதிமுறைகளை மீறி குடிநீர் குழாய்களில் பொருத்திய 42 மின் மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


விதிமுறைகளை மீறி குடிநீர் குழாய்களில் பொருத்திய 42 மின் மோட்டார்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 2:00 PM GMT)

தர்மபுரி நகரில் விதிமுறையை மீறி குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்ட 42 மின்மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் மொத்தம் 17 ஆயிரத்து 147 வீடுகள் உள்ளன. இவற்றில் 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். நகராட்சி சார்பில் 9776 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒகேனக்கல் குடிநீர் திட்டம், பஞ்சப்பள்ளி அணை குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் சுழற்சி முறையில் நகராட்சி பகுதியில் ஒருநாள் விட்டு ஒரு நாள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் அளவும் குறைக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற்று உள்ளவர்கள் விதிமுறையை மீறி குடிநீர் குழாயில் மின்மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சுவதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தன.

இந்த புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வு நடத்த கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் உதவி பொறியாளர் ரவிக்குமார், குழாய் ஆய்வாளர்கள் சாம்ராஜ், அம்பலத்தரசன் மற்றும் மின்பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் பாரதிபுரம், குமரபுரி காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பல வீடுகளில் விதிமுறைகளை மீறி குடிநீர் குழாய்களில் மின்மோட்டார்களை பொருத்தி வைத்திருப்பது தெரியவந்தது. அவ்வாறு குடிநீர் இணைப்புகளில் பொருத்தப்பட்டிருந்த 42 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தர்மபுரி நகரில் விதிமுறைகளை மீறி குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி சட்டவிதிமுறைகளை மீறி குடிநீரை உறிஞ்சும் செயலில் ஈடுபடுவோரின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அத்தகைய மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரித்து உள்ளார்.


Next Story