“தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது” தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
“தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது” என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட பாரம்பரிய ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகளும், ஜெயலலிதா 16 ஆண்டுகளும் அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தினர். அவர்களது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்துவதால்தான், அ.தி.மு.க.வுக்கு மக்கள் தொடர்ந்து வாக்களித்து ஆதரவு தருகின்றனர்.
தமிழகத்தில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடைபெறுகிறதா? என்பதை மக்கள்தான் கூற வேண்டும். அது பற்றி பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சான்றிதழ் வழங்க தேவையில்லை. தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலர போவதில்லை. அவர்கள் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் அல்லது நோட்டாவைவிட அதிக வாக்குகள் வாங்கினால் நல்லது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வருகிறது. அ.தி.மு.க.வுக்கு 33 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி இருப்பதாக சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும், ஒரு தொகுதியில்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. மற்றொரு தொகுதியில் பா.ம.க. வென்றது.
ஆனால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வென்று காட்டினார். தி.மு.க. கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை கூட்டணிக்கு அழைத்தவர்களிடம்தான், அவர்களை எதற்காக அழைத்தார்கள்? என்று கேட்க வேண்டும்.
கடம்பூர், வில்லிசேரி, சத்திரப்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. எட்டயபுரம்-பருவக்குடி இடையே நாற்கர சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி நகரின் நடுவில் லட்சுமி மில் மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரையிலும் நாற்கர சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இங்கு சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் அங்குள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்து, சாலையோர மரங்கள் அகற்றப்பட்டன. எனவே பொங்கல் பண்டிகைக்கு பின்னர் அங்கு நாற்கர சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது கட்சியை நடத்த முடியாமல் திண்டாடி வருகிறார். கோபாலபுரம் பக்கத்தில் என் சாம்பல்கூட போகாது என்று கூறிய அவர், தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க போவதாக கூறுகிறார். இவர் சொன்னாலே மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் அவ்வளவு ராசிக்கு சொந்தக்காரர். அ.தி.மு.க. ஆட்சி வருகிற 2021-ம் ஆண்டு வரையிலும் நடைபெறும். அதன்பின்னர் நடைபெறும் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Related Tags :
Next Story