கூடலூரில் கடும் பனிப்பொழிவு, காபி செடிகள் பூக்க தொடங்கின


கூடலூரில் கடும் பனிப்பொழிவு, காபி செடிகள் பூக்க தொடங்கின
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 11 Jan 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் காபி செடிகள் பூக்க தொடங்கி இருக்கின்றன.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும். நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதம் உறைபனியின் தாக்கத்தால், கடும் குளிர் நிலவும். ஆனால் கடந்த மாதம் பனிப்பொழிவு குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கூடலூர் பகுதியில் மாலை தொடங்கி மறுநாள் காலை 11 மணி வரை கடும் குளிர் நிலவுகிறது. அதன்பின்னர் நன்கு வெயில் அடிக்கிறது. இருவேறு காலநிலைகளால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தேயிலை செடிகளில் மகசூல் குறைந்து வருகிறது. கூடலூர், வயநாடு பகுதியில் அராபிக்கா, ரொபஸ்டா வகை காபி பயிர்கள் விளைகிறது. கூடலூரில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் காபி விளைவிக்கப்படுகிறது.

தற்போது காபி அறுவடை சீசன் நடக்கிறது. இதனால் விளைந்த காபி காய்களை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அறுவடை செய்த காபிக்காய்களை திறந்த வெளியில் பரப்பி காய வைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு உள்ளது.

இதனால் அறுவடை சீசன் சமயத்தில் காபி செடிகள் மீண்டும் பூக்க தொடங்கி உள்ளன. ஆனால் பகலில் நன்கு வெயில் அடிப்பதால் வறட்சியான காலநிலை காணப்படுகிறது. இதனால் செடிகளில் பூக்க தொடங்கி உள்ள மொட்டுகள் கருகும் நிலை உள்ளது.

இதேபோல் காபி காய்களை பறிப்பதால் மொட்டுகள் உதிரவும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் காபி செடிகள் பூக்கும். ஆனால் முன்கூட்டியே பூத்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர்.

Next Story