ஒருதலைக்காதலால் விபரீதம்: திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது


ஒருதலைக்காதலால் விபரீதம்: திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Jan 2019 3:45 AM IST (Updated: 11 Jan 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒருதலைக்காதலால் விபரீத சம்பவம் நடந்து உள்ளது.

கழுகுமலை, 

கழுகுமலையில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் 17 வயது வாலிபர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் அங்கு வேலை செய்து வரும் 22 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த வாலிபர் அடிக்கடி அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்தார். ஆனால் அந்த இளம்பெண் தன்னைவிட 5 வயது குறைவான அந்த வாலிபரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இருந்தபோதிலும் அந்த பெண்ணை அவர் ஒருதலையாக காதலித்து வந்தாராம்.

நேற்று முன்தினம் இரவில் அந்த வாலிபரும், இளம்பெண்ணும் தீப்பெட்டி தொழிற்சாலையில் இரவு பணிக்கு சென்றனர். அப்போது நள்ளிரவில் அந்த வாலிபர் மீண்டும் அந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த இளம்பெண்ணின் தலை, கையில் சரமாரியாக குத்தினார். இதில் காயம் அடைந்த அந்த இளம்பெண் அலறினார். உடனே அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து சென்று, காயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கழுகுமலை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்து, தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவரை போலீசார் பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Next Story