கோவில் வளாக கடைகளை 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் எச்சரிக்கை


கோவில் வளாக கடைகளை 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2019 3:45 AM IST (Updated: 11 Jan 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை வருகிற 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு நடந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் இருந்த கடைகள் எரிந்தன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து நெல்லையில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் சுமார் 40 கடைகள் உள்ளன.

சங்கரன்கோவில் சங்கநாராயண சுவாமி கோவில், தென்காசி மேல முத்தாரம்மன் கோவில், தென்பழனி ஆண்டவர் கோவில் வளாகத்தில் கடைகள் உள்ளன. அந்த கடைகளை காலி செய்யுமாறு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சிலர் கடைகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர். ஆனால் பலர் கடைகளை காலி செய்யவில்லை. அவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story