ஊழலை பற்றி பேச டி.டி.வி.தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
ஊழலை பற்றி பேச டி.டி.வி.தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அருகே மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டை ரூ.2.95 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சீரமைப்பு பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டை ரூ.2.95 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஏரிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, 388 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி உபரிநீரை, அதிக உந்து சக்தியுள்ள மின்மோட்டார்கள் வைத்து ஏரிகளுக்கு நிரப்புவதற்கான திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி நீர்ப்பாசன திட்டத்தை தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
பாலக்கோடு சட்டசபை தொகுதியில் நான் வளர்ச்சி திட்ட பணிகள் எதையும் செய்யவில்லை என்று டி.டி.வி.தினகரன் விமர்சித்து உள்ளார். அப்படி இருந்தால் 4 முறை என்னை எம்.எல்.ஏ.வாக அந்த தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்து இருக்க மாட்டார்கள். தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறேன். என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரே ஒரு ஊழல் பேர்வழி. ஊழலை பற்றி பேசுவதற்கு தார்மீக அடிப்படையில் டி.டி.வி. தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட தினகரன், 11 ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்று தெரியவில்லை.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை முழுவதுமாக முடிப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் தான் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு எந்த பயமும் இல்லை. மக்கள் பணியை சிறப்பாக செய்து வருவதால், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை அ.தி.மு.க. சந்திக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
Related Tags :
Next Story