கல்லாவி பகுதியில் சுண்ணாம்பு கல் விற்பனை குறைவு உற்பத்தியாளர்கள் கவலை


கல்லாவி பகுதியில் சுண்ணாம்பு கல் விற்பனை குறைவு உற்பத்தியாளர்கள் கவலை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 6:41 PM GMT)

பொங்கல் பண்டிகை நெருங்கிய போதிலும் கல்லாவி பகுதியில் சுண்ணாம்பு கல் விற்பனை குறைவாகவே காணப்படுவதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கல்லாவி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளான கல்லாவி, கல்லூர், ஓலைப்பட்டி, காரப்பட்டு, கதவணி ஆகிய இடங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சுண்ணாம்பு கற்கள் சூளைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்பு கல், கட்டிடம் கட்டுவதற்கும், வீட்டு கூறையின் மேல்பகுதியில் சுறுக்கி போடவும், வர்ணம் பூசுவதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளில் வெள்ளை வர்ணம் அடிப்பதற்காக இதனை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றனர்.

இதனால் பொங்கல் பண்டிகை நெருங்கும் போதெல்லாம் சுண்ணாம்பு கற்கள் விற்பனை அதிகம் நடைபெற்று, உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுண்ணாம்பு கற்களை சூடுபடுத்தும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது சுண்ணாம்பு கல் விற்பனை மிகவும் குறைந்துள்ளது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுண்ணாம்பு கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:- ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே சுண்ணாம்பு கல் கிடைக்கிறது. அதை சூடுபடுத்தி விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை அதிகமாகவே இருக்கும்.

அதனால் பொங்கல் பண்டிகை முடியும் வரை தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்கும். இந்த தொழிலில் 70 சதவீதம் பெண்களே ஈடுபடுகின்றனர். பொங்கல் பண்டிகை மட்டுமின்றி பிற பண்டிகை நாட்களிலும் தங்கள் வீடுகளில் வர்ணம் பூச கிராமம் மற்றும் வெளியூர்களில் இருந்து நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.

ஆனால் கடந்த மூன்று ஆடுகளாக சுண்ணாம்பு கல் விற்பனை குறைந்துள்ளது. தற்போது பெரும்பலான வீடுகளுக்கு வண்ண, வண்ண கலரில் வர்ணம் பூசுவதும், சுண்ணாம்பு கல் இல்லாத பொடிகளை வாங்கி பூசுவதிலும் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக சுண்ணாம்பு கல்லின் விற்பனை குறைந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட ஒரு சுண்ணாம்பு மூட்டை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே நிலை இப்போதும் நீடித்துள்ளது. வாகனங்களில் கல் எடுத்துவர ஆண்டுதோறும் வாடகை கூடுதலாகிறது. ஆனால், உற்பத்திக்கு ஆகும் செலவு கூட தற்போது கிடைக்கவில்லை என்றனர்.

Next Story