கபிலர்மலை மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.38.56 லட்சத்தில் நலத்திட்ட உதவி கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


கபிலர்மலை மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.38.56 லட்சத்தில் நலத்திட்ட உதவி கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 6:51 PM GMT)

கபிலர்மலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 217 பயனாளிகளுக்கு ரூ.38.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை கொங்குவேளாளர் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசியா மரியம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இந்த முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, 68 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 29 பேருக்கு ரூ.78,250 மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 10 குடும்பத்தாருக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.10,000 மதிப்பிலான திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதேபோல 16 பயனாளிகளுக்கு வாரிசு சான்று, 18 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்று, 23 பேருக்கு பட்டா மாறுதல், 1 பயனாளிக்கு சாதி சான்றிதழ், 17 பயனாளிகளுக்கு நத்தம் மனைவாரி தோராய பட்டா, வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 6 பேருக்கு ரூ.20.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, வேளாண்மைத்துறையின் சார்பில் 6 பேருக்கு ரூ.45,466 மதிப்பிலான நலத்திட்ட உதவி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.1.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி என மொத்தம் 217 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 56 ஆயிரத்து 43 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி அம்மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், பரமத்தி வேலூர் வருவாய் தாசில்தார் ருக்குமணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story