இருசக்கர வாகனங்கள் மோதல்: தந்தையுடன் சென்ற மாணவர் பலி
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தையுடன் சென்ற 6-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் பானு நகர் 26-வது அவென்யூவை சேர்ந்தவர் முரசொலி (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஆகாஷ் (11). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து தனது மகன் ஆகாசை, முரசொலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது எதிரே அம்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் சீனிவாசன் (50) வந்த இருசக்கர வாகனமும், இவர்கள் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியது.
இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஆகாசுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆகாஷ் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதில் முரசொலி, சீனிவாசன் இருவரும் லேசான காயம் அடைந்தனர். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story