தேனி அருகே புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்


தேனி அருகே புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே சுரங்க பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தேனி,

போடி-மதுரை இடையே இயக்கப்பட்ட ரெயில் கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக் கும் பணி தொடங்கியது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இதற்கான பணிகள் முடங்கின. ரெயில்பாதை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்தன.

இதன் எதிரொலியாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் சிறு,சிறு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த பணிகளின் ஒரு அங்கமாக தேனி அருகே குன்னூர் சுங்கச்சாவடியில் இருந்து விவசாய நிலங்கள் வழியாக மீனாட்சிபுரம் செல்லும் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையில் மேற்பகுதியில் உள்ள பாலத்தின் மீது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதை உள்ள பகுதி மிகவும் தாழ்வாக அமைந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காமல் வேறு பகுதிக்கு செல்லும் வகையில் குழாய் வசதி கூட செய்யப்படாமல் உள்ளது. இதனால் அங்கு மழை நீர் வெளியே றாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. அதை பார்க்கும்போது கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்பதை போல் காட்சி அளிக்கிறது.

இதனால், தற்போது வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாமல் விவசாய நிலங்களின் வழியாக மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரெயில் இயக்கப்பட்டால் இந்த பாதை துண்டிக்கப்படும். எனவே, தற்போது பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், அங்கு தண்ணீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story