நீலகிரியை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் - மண்டல அதிகாரி தகவல்


நீலகிரியை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் - மண்டல அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மண்டல அதிகாரி சிவக்குமார் கூறினார்.

கோவை,

பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்கி பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சிவக்குமார் கூறியதாவது:-

பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் போலீஸ் துறையின் சரிபார்ப்புக்காக ‘எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி’யை கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதற்காக 1,700 ‘கை கணினி’ (டேப்லெட்) வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிப்பார்ப்பு பணியை போலீசார் துரிதமாக செய்தனர்.

கோவை உள்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 922 பாஸ்போர்ட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 5 ஆயிரத்து 397 பேருக்கு போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது குவைத், ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளுக்கு செல்பவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு அவசியம். அதன்படி கடந்த ஆண்டில் அவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் உள்ளவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு நேர்காணலுக்கான தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த தேதியில் இருந்து போலீஸ் சரிபார்ப்பு முடிந்தவுடன் பாஸ்போர்ட் அனுப்பப்படும். அதன்படி கோவை மண்டலத்தில் நீலகிரி மற்றும் நாமக்கல் ஆகிய 2 மாவட்ட போலீசார் தான் 4 நாட்களில் போலீஸ் சரிபார்ப்பு பணியை முடித்து விடுகிறார்கள். மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகரில் 6 நாட்களிலும், சேலம் மாநகர், புறநகரில் 6 நாட்களிலும், திருப்பூர் மாநகரில் 11 நாட்களிலும், புறநகரில் 6 நாட்களிலும், ஈரோட்டில் 7 நாட்களிலும் போலீஸ் சரிபார்ப்பு முடிக்கப்படுகிறது.

போலீஸ் சரிபார்ப்பு சரியாக இருக்கிறது என்ற தகவல் ஆன்லைனில் வந்தவுடன் உடனடியாக பாஸ்போர்ட் அச்சடிக்கப்பட்டு விரைவு தபால் மூலம் அனுப்பப்படும். அதன்படி பார்த்தால் நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ளவர்கள் விண்ணப்பித்த 4 நாட்களில் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும். அதாவது பாஸ்போர்ட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அவர்களுக்கு நேர்காணலுக்கான தேதி முன்பதிவு செய்ய வேண்டும். நேர்காணலில் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த தினத்தில் இருந்து தான் போலீஸ் சரிபார்ப்பு நாட்கள் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story