இந்து முன்னணியினர் –பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரம்: இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு


இந்து முன்னணியினர் –பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரம்: இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 9:03 PM GMT)

ஊதியூரில் தனியார் நிறுவனம் பால்பண்ணை கட்டும் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியினர்–பொதுமக்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூரில் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்த பகுதியில் 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் குண்டடம் செல்லும் ரோட்டில் கருக்கம்பாளையம் பிரிவு அருகில் தனியார் நிறுவனம் ஒன்று பால்பதப்படுத்தும் தொழிற்சாலைக்கான கட்டிடத்தை கட்டி வருகிறது.

இந்த கட்டிடம் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வருவதாக இந்து முன்னணியினரும், பால்பண்ணைக்கு ஆதரவாக ஊதியூர் பகுதி பொதுமக்களும் ஊதியூரில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து ஊதியூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், மீண்டும் மோதல் வராமல் இருக்க ஏராளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் ஊதியூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, இருதரப்பையும் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தகராறு ஏற்படாமல் இருக்க ஊதியூரில் 3 இடங்களில் முகாம் அமைத்து ஷிப்ட் முறையில் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முகாம் தொடர்ந்து 5 நாட்கள் இருக்கும் என்று காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story