நிலத்தடிநீரை மேம்படுத்த அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


நிலத்தடிநீரை மேம்படுத்த அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2019 4:45 AM IST (Updated: 12 Jan 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீரை மேம்படுத்த அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிபட்டி,

காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் அமராவதி ஆறும் ஒன்றாகும். இது பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத் தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து புறப்படும் அமராவதி ஆற்றுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு ஆகிய சிற்றாறுகள் இணைந்து அமராவதி அணையை வந்தடைகிறது.

பின்னர் அங்கிருந்து சென்று அமராவதி ஆற்றில் கொழுமம் அருகில் குதிரையாறு வந்து இணைகிறது. இவ்வாறு பாய்ந்து செல்லும் அமராவதி ஆறு கரூர் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இதன்படி வாய்மடை தொடங்கி கடைமடை வரை சுமார் 240 கிலோமீட்டர் பயணம் செய்யும் அமராவதி ஆறு திருப்பூர், கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

சங்கராமநல்லூர், கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமராவதி ஆற்றின் மூலம் குடிநீர்த்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அமராவதி ஆற்றின் மூலம் பழைய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் ஆற்றங்கரையோர கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் அமராவதி ஆறு பெரும்பங்குவகிக்கிறது.

இந்த நிலையில் போதிய மழை இல்லாத நிலையில் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் அமராவதி ஆறு வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலையில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டவேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில் “அமராவதி ஆறு மூலம் நேரடி பாசனம் மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டம் உயரக்காரணமாக இருப்பதன் மூலம் மறைமுக பாசனத்துக்கு உதவி வருகிறது. ஆனால் மழைக்காலங்களில் பெருமளவு நீர் பயன்படுத்த முடியாமல் கடலில் சென்று கலக்கும் நிலையே உள்ளது. இந்த நீரை அங்கங்கே தடுப்பணைகள் கட்டி தேக்கி வைப்பதன் மூலம் பெருமளவு நீரை வீணாகாமல் தடுக்க முடியும். பொதுவாக தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நீர் இருப்பைக் கூட்டவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் முடியும்.

நீர்மேலாண்மையில் தடுப்பணைகள் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அதன் அடிப்படையில் தற்பொழுது பல நீரோடைகள் மற்றும் நீர்வழி தடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி உபரி நீரைச் சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story