திருப்பூர், பல்லடத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர், பல்லடத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், பல்லடத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

ஜாக்டோ–ஜியோ அமைப்பின் திருப்பூர் வடக்கு வட்டாரக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரன் ரோட்டில் உள்ள வடக்கு வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் செல்வகுமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் நாகராஜ் கணேஷ், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடியில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை பிற பணிகளுக்காக ஈடுபடுத்த கூடாது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு வட்டாரக்குழு சார்பில் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்புறம் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி காளீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயலாளர் பரமசிவம் வரவேற்று பேசினார். தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் பகுதி தலைவர் நடராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜப்பிரியா, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொருளாளர் லூக்காஸ், ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினார்கள். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.


Next Story