காணாமல் போன 7 மீனவர்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, விசுவேஸ்வர தீர்த்த சுவாமி கடிதம்
காணாமல் போன 7 மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, விசுவேஸ்வர தீர்த்த சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
மங்களூரு,
உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம்(டிசம்பர்) 13-ந் தேதி 7 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற படகு மாயமானது. அவர்களும் கரைக்கு திரும்பி வரவில்லை. அவர்கள் காணாமல் போனது தெரியவந்து உள்ளது.
இந்த நிலையில் காணாமல் போன 7 மீனவர்களையும் கண்டுபிடித்து தர வேண்டும் என்று மீனவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பிரமாண்ட பேரணி
இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என்று உடுப்பியில்பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயமாலா, கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் அண்டை மாநில கடற்கரை மாவட்டங்களின் கலெக்டர்களை தொடர்பு கொண்டும், உடுப்பி கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ் காணாமல் போன மீனவர்களை பற்றி விசாரித்தார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த நிலையில் உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில் காணாமல் போன 7 மீனவர்களை மீட்டு தர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காணாமல் போன 7 மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பி வரவேண்டி மங்களூரு டவுன் உல்லால் பகுதியில் உள்ள சோமநாதேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜையும், கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடை பெற்றது.
Related Tags :
Next Story