யார் பிரதமர் ஆனாலும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய முடியாது தேவேகவுடா பேட்டி
யார் பிரதமர் ஆனாலும், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய முடியாது என்று தேவேகவுடா கூறினார்.
ஹாசன்,
ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஹாசன் தொகுதி எம்.பி.தேவேகவுடா தலைமையில் நேற்று நடந்தது.
இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.டி.ரேவண்ணா, மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி புட்டசாமி, போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா, எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலையிட முடியாது
இந்த கூட்டம் முடிந்ததும் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா படுதோல்வியை தழுவியது. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதா மீதான மக்களின் மனநிலையை எடுத்து காட்டுவதாக அமைந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளதையொட்டி, நாட்டு மக்களை சரிசெய்ய ஏராளமான நலத்திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற மோடி மாயாஜாலம் செய்து வருகிறார். அவரின் மாயாஜாலம் இந்த முறை மக்களிடம் எடுபடாது.
உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நான் வரவேற்கிறேன். சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு உள்ளதால், வேறு யாரும் அந்த விஷயத்தில் தலையிட முடியாது.
வேலையில்லா திண்டாட்டத்தை....
நாடாளுமன்ற தேர்தலின் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு பற்றி இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. ராகுல் காந்தி, சித்தராமையா, வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 10 தொகுதிகள் மட்டும் ஒதுக்க வேண்டும் என்று வீரப்ப மொய்லி எம்.பி. பேசியது பற்றி எனக்கு தெரியாது.
இந்திய நாட்டில் யார் பிரதமர் ஆனாலும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாது. நமது நாடு விவசாய நாடு. இதனால் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story