விராஜ்பேட்டை அருகே ருசிகரம் வகுப்பறையில் மாணவிக்கு வளைகாப்பு தோழிகளும், பேராசிரியைகளும் நடத்தினர்
விராஜ்பேட்டை அருகே வகுப்பறையில் கல்லூரி மாணவிக்கு அவரது தோழிகளும், பேராசிரியைகளும் வளைகாப்பு நடத்திய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெண்கள் கர்ப்பமானதும் தாய் வீட்டு சார்பில் வளைகாப்பு நடத்தப்படுவது வழக்கம். தாய்மைக்கு மரியாதை செலுத்தும் இந்த சடங்கு பழங்காலம் தொட்டே நடந்து வருகிறது.
கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மைசூரு சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஒரு பெண் போலீஸ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சக போலீசாரே போலீஸ் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவருக்கும் அளித்தது. அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு பிறகும் கல்லூரி படிப்பை தொடர்ந்த மாணவி கர்ப்பிணியானார். அவருக்கு சக தோழிகள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்பறையில் வைத்து வளைகாப்பு வைபவம் நடத்திய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பி.காம் 2-ம் ஆண்டு மாணவி
அதுபற்றிய விவரம் வருமாறு:-
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ளது கோணிகொப்பா. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாலினி. இவர் கோணிகொப்பாவில் உள்ள காவிரி கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே ஷாலினிக்கு திருமணம் நடந்தது. தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார்.
கர்ப்பமாக இருந்த போதும் தனது கல்லூரி படிப்பை அவர் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஷாலினி கர்ப்பமாக இருப்பதை அறிந்த சக மாணவிகளும், வகுப்பு பேராசிரியர்களும் அவருக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். இதுபற்றி ஷாலினியிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை.
வளைகாப்பு
இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியான ஷாலினி, நேற்று முன்தினம் வழக்கம் ேபால் கல்லூரிக்கு வந்தார். அங்கே அவருக்கு இன்பஅதிர்ச்சி காத்திருந்தது. சக மாணவிகளும், பேராசிரியைகள், பேராசிரியர்களும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். இதை பார்த்து ஷாலினி மகிழ்ச்சி வெள்ளத்தில் பூரித்துபோனார்.
பல்வேறு பழவகைகள் அடங்கிய தட்டுகள் மற்றும் மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தட்டுகளை மாணவிகள், பேராசிரியைகள் சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
பின்னர் பேராசிரியைகளும், மாணவிகளும் ஷாலினிக்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றால் திலகமிட்டும், கன்னத்திலும் தடவினர். பின்னர் கர்ப்பிணிக்கு நடத்தப்படும் வளைகாப்பு சடங்குகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதையடுத்து கல்லூரி முடிந்து ஷாலினியை சகமாணவிகள் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வந்தனர். இந்த ருசிகர சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story