கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கு: தாதா குருசாட்டம் கூட்டாளி கைது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிக்கினார்
கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாதா குருசாட்டம் கூட்டாளி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையில் கட்டுமான அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாதா குருசாட்டம் கூட்டாளிகளான அமோல் விஜாரே, பாரத் சோலாங்கி, ராஜேஷ் அம்ப்ரே, பிபின் தோத்ரே மற்றும் தீபக் லோதியா ஆகியோரை கடந்த ஜூலை மாதம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தாதாவின் கூட்டாளி கேரளாவை சேர்ந்த கெவின் (வயது46) என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
கைது
இந்தநிலையில், கெவின் ஹாங்காங்கில் இருந்து கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமானத்தில் வந்திறங்கிய கெவினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான பிபின் தோத்ரே மும்பையில் உள்ள கட்டுமான அதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்து கெவினுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
கெவின் அந்த பணத்தை ஹவாலா பண பரிவர்த்தனை மூலம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தாதா குருசாட்டமுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கெவினை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story