கோவையில் பெண்ணிடம் சங்கிலி பறித்த நகைக்கடை காவலாளி கைது


கோவையில் பெண்ணிடம் சங்கிலி பறித்த நகைக்கடை காவலாளி கைது
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பெண்ணிடம் சங்கிலி பறித்த நகைக்கடை காவலாளியை பொதுமக்கள் விரட்டி பிடித்து தாக்கினர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கோவை, 

கோவை சித்தாபுதூரை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி பிரேமா (வயது 57). இவர் பீளமேடு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பாரதியார் ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேமா திருடன்... திருடன்... என்று கத்தினார்.

இதையடுத்து, பஸ்நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த மர்ம ஆசாமியை விரட்டி பிடித்து தாக்கினார்கள். பின்னர், அவரை காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த ஆசாமி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவா (34) என்பதும், கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதும், குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நகைக்கடையில் வேலை பார்த்த காவலாளியே பெண்ணிடம் சங்கிலி பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story