தூய்மையாக இருந்தால் மருந்துவ செலவு குறைந்து விடும்; கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


தூய்மையாக இருந்தால் மருந்துவ செலவு குறைந்து விடும்; கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:30 PM GMT (Updated: 11 Jan 2019 10:40 PM GMT)

தூய்மையாக இருந்தால் மருந்துவ செலவு குறைந்து விடும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். பின் கவர்னர் பேசும்போது கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்ட மாணவ–மாணவிகளுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டம் பெயரிலேயே ராமநாதசுவாமி என்ற கடவுள் பெயரை கொண்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்களிடம் முக்கிய கடமையாகும். நகர் முழுவதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நான் கூறும் கருத்து முதலில் மாணவர்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்களை அழைத்து வந்து உங்கள் வீட்டை காட்டுங்கள். என் வீடு சுத்தம், என் நகரம் சுத்தம் என்பதன் மூலம் இந்தியா சிறந்த தூய்மையான நாடாக மாறிவிடும். நான் எதிர்பார்க்கிறேன். ராமநாதபுரம் மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தில் சிறந்த மாவட்டம் என விருது பெற வேண்டும். தூய்மையாக இருப்பதால் மருத்துவ செலவு 50 சதவீதம் குறைந்துவிடும். எனவே மாணவர்கள் தூய்மை பாரத இயக்கம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாவட்ட கலெக்டர், இளைஞர் என்பதால் துடிப்புடன் செயல்பட்டு மக்கள் நல பணிகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். பிரதமரின் தூய்மை பாரத இயக்க பணிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். அவரின் செயல் பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன், கவர்னரின் கூடுதல் தலைமை செயலர் ராஜகோபால், கலெக்டர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் சரவணன், பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுமன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசதன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராஜா, சேவுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story