மாவட்ட செய்திகள்

சிவகங்கை, ராமநாதபுரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர் + "||" + Sivagangai, Ramanathapuram The governor involved in the cleaning process

சிவகங்கை, ராமநாதபுரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர்

சிவகங்கை, ராமநாதபுரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர்
சிவகங்கை, ராமநாதபுரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பணியில் ஈடுபட்டார்.

சிவகங்கை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று சிவகங்கைக்கு வந்தார். அவரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பயணிகள் விடுதியில் அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் கவர்னர், சிவகங்கை நகர் பஸ்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த துப்பரவு பணியை தொடங்கி வைத்தார். மேலும் அவர் நகராட்சி பணியாளர்களுடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். அவருடன் அமைச்சர், எம்.பி., கலெக்டர் ஆகியோரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:– இந்த ஊர் கடவுள் சிவன் மற்றும் புனித கங்கையின் பெயர் கொண்ட பெருமை வாய்ந்த ஊராகும். கங்கைநதியை தற்போது தூய்மை படுத்தும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. அதுபோல சிவகங்கையாகிய ஊரை சுத்தமாக பாதுகாப்பது அனைத்து குடிமகன்களின் கடமையாகும்.

பிரதமர் இந்திய நாடு சீர்மிகுந்த நாடாக உருவாக்கிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தூய்மைப் பணிகளுக்கு அதிக கவனம் எடுத்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி நமது தமிழகம் தூய்மை தமிழகமாக உருவெடுப்பது பொதுமக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் கவர்னர் படிக்க அதை அங்கு கூடி இருந்தவர்கள் திரும்ப கூறினர். தொடர்ந்து ஒரு மாணவர் உறுதி மொழியை தமிழில் படித்தார். இதைக்கேட்ட கவர்னர் தமிழ் சிறந்த மொழி என்றார்.

பின்பு பஸ்நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சென்ற கவர்னர், கடைக்காரர்களிடம் அந்த பகுதியை சுத்தமாக வைத்து கொள்வதுடன் குப்பைகளை கீழே போடதீர்கள் என்று கூறினார். தொடர்ந்து அவர் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள பெட்ரோல் பங்க், ஓட்டல், வணிகவளாகம் ஆகியவற்றின் உரிமையாளர்களை அழைத்து பேசினார். அப்போது வணிகர்கள் தங்கள் கடைகளை தினமும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தூய்மை இந்தியா திட்டப் பணிகள், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட நிவாரண பணிகள் குறித்து கலெக்டரிடம் கவர்னர் கேட்டறிந்தார். பின்பு பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலர் ராஜகோபால், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், கவர்னரின் மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று வந்தார். அவர் மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது கவர்னர், பள்ளி மாணவ–மாணவிகளுடன் கலந்துரையாடி தூய்மை பாரத இயக்க திட்டத்தின் அவசியம் குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலக வளாகத்தில் கவர்னர் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது ராமநாதபுரம் பகுதி தூய்மையாக இருப்பதாகவும், தமிழ் மொழி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். பின்பு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அரங்கினை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து து£ய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ரதத்தினை பொதுமக்களின் பார்வைக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழா அரங்கின் எதிரே இருந்த கடைக்கு சென்று டீ அருந்திய அவர் அங்கு அனைத்து இடங்களையும் பார்வையிட்டு சுகாதாரமாக இருப்பதை கண்டு அதன் உரிமையாளரை பாராட்டினார்.

முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கவர்னர் பெற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 கருணை அடிப்படையில் பெண் என்ஜினீயருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி

சிவகங்கையில் கவரினரிடம் திருப்புவனம் தட்டாங்குளத்தை சேர்ந்த பெண் என்ஜினீயரான நித்யா என்பவர் ஒரு மனு கொடுத்தார். அதில் சத்துணவு கூடத்தில் சமையலராக இருந்த தனது தாயார் சுந்தரி கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டதாகவும் தமக்கு அரசு வேலை வலை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை பரிசீலித்த கவர்னர் அந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் திருப்புவனம் ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிநியமனம் செய்து அதற்கான ஆணையை வழங்கினார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை