தஞ்சை மாவட்டத்தில், கஜா புயலால் 28 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் சேதம்


தஞ்சை மாவட்டத்தில், கஜா புயலால் 28 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் சேதம்
x
தினத்தந்தி 12 Jan 2019 4:35 AM IST (Updated: 12 Jan 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் புயலால் 28 ஆயிரம் எல்.இ.டி. மின்விளக்குகள் சேதம் அடைந்துள்ளன. இந்த விளக்குகள் 1 வாரத்தில் சீரமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

இது தவிர மாடி வீடுகளும் சேதம் அடைந்தன. மேலும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், புளிய மரங்கள், மாமரங்கள், பலா மரங்கள் உள்ளிட்ட மரங்களும் முறிந்து விழுந்தன. நெல், வாழை, எலுமிச்சை, மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் சேதம் அடைந்தன.

இந்த புயலினால் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு தற்போது அனைத்து கிராமங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் விவசாய விளை நிலங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தாலுகா பகுதிகளில் உள்ள 227 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டன. ஏராளமான கால்நடைகள் இறந்தன. இதில் இருந்து தற்போது மக்கள் மீண்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் 300-க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்கள் வரழைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தன. மின்கம்பங்கள் சீரானதை தொடர்ந்து அந்த ஜெனரேட்டர்கள், அந்தந்த பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டன.

227 ஊராட்சிகளிலும் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டு இருந்த எல்.இ.டி. மின்விளக்குகளில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்.இ.டி. விளக்குகள் சேதம் அடைந்தன. இந்த விளக்குகள் சேதம் அடைந்ததால் கிராமங்களில் உள்ள தெருக்கள் இருளில் மூழ்கி காணப்பட்டன. இதையடுத்து புதிய எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் கூறுகையில், “புயலால் பாதிக்கப்பட்ட 227 ஊராட்சிகளில் பொருத்தப்பட்டு இருந்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்.இ.டி. விளக்குகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த விளக்குகளுக்கு பதிலாக புதிய விளக்குகள் பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வார காலத்துக்குள் புதிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். தற்போது கிராமப்பகுதிகளில் உள்ள தெருக் களில் இருளை அகற்றும் வகையில் தற்காலிகமாக விளக்குகள் பொருத்தப்பட்டு எரியவிடப்பட்டுள்ளன” என்றார்.

Next Story