ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களின் மனதை தி.மு.க. வெல்ல முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு


ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களின் மனதை தி.மு.க. வெல்ல முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:48 PM GMT (Updated: 11 Jan 2019 11:48 PM GMT)

ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களின் மனதை தி.மு.க. வெல்ல முடியாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

கரூர்,

கரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நன்னியூர் புதூர் ஊராட்சி செவ்வந்திபாளையத்தில், அ.தி.மு.க.அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு முடியட்டும், விடியட்டும் என்று கூறி நமக்கு நாமே பிரசாரத்தை தி.மு.க. மேற்கொண்டது. எனினும் ஜெயலலிதாவின் ஒரே சுற்றுப் பயணம் அதனை காலி செய்து விட்டு அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியதை மறக்க இயலுமா?. அதன்படி தற்போது தி.மு.க.வினர் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களின் மனதை வெல்ல முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி அ.தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை நல்லபடி பதிய வைத்து இருக்கிறோம். இனி வருகிற தேர்தலில் நாங்கள் ஜெயலலிதா திட்டங்களை மக்களிடம் சொல்வோம், வாக்குகளை அள்ளி செல்வோம். ஜெயலலிதாவின் இறப்புக்கு முக்கிய காரணம் தி.மு.க. தொடர்ந்த வழக்கும், மன்னார்குடி கும்பலும் தான்.

சட்டையை மாற்றுவது போல், கட்சியை மாற்றிகொள்ளும் செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு சென்ற துரோகத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் ஊர் ஊராக சென்று குறைகளை சுட்டிக்காட்டி கோரிக்கை தீர்மானத்தை நிறைவேற்றுவது வேடிக்கையாக உள்ளது. வாங்கல்-மோகனூர் பாலம் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டு வந்தது அ.தி.மு.க. பிறகு சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் மின்விளக்கு வசதி ஏற்படுத்தியுள்ளோம். இந்த நிலையில் மின்விளக்குகள் இல்லை என்று அவர்கள் தீர்மானிப்பது சரியல்ல என்பது மக்களுக்கு தெளிவாக புரியும்.

காவிரி ஆற்றில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெரூர்-உன்னியூர் இடையே ரூ.135 கோடி செலவில் உயர்மட்ட பாலப்பணி விரைவில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. எத்தனை கூட்டம் நடத்தி தி.மு.க. தேர்தல் வியூகம் அமைத்தாலும், வருகிற தேர்தலில் எங்களது செயல்பாட்டினால் தக்க பதில் அடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மீனவரணி செயலாளர் சுதாகர், மகளிரணி செயலாளர் ரேணுகா மோகன்ராஜ், மகளிரணி துணை அமைப்பாளர் செல்வி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story