கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் தர்மபுரியில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தர்மபுரியில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நூலக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் வரவேற்றார். சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சரவணகுமார், மாவட்ட நிர்வாகி ஜாகீர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாநில தலைவர் சிவப்பிரகாசம், கூட்டமைப்பு நிர்வாகிகள் இளவேனில், தெய்வானை, நெடுஞ்செழியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாநில துணைத்தலைவர் யோகராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தரம் உயர்த்தப்பட்ட முழுநேர நூலகங்களுக்கு நூலகர்களை நியமிக்க வேண்டும். ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நூலகர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வராமல் மேலும் காலஅவகாசம் கேட்கும் நிலையில் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 18–ந்தேதி மற்றும் 21–ந்தேதிகளில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்வது, வருகிற 22–ந்தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 23–ந்தேதி மற்றும் 24–ந்தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா அளவில் மறியல் போராட்டத்தையும், 25–ந்தேதி தர்மபுரி மாவட்ட அளவில் மறியல் போராட்டத்தையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.