தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
பொங்கல் விழா மற்றும் எதிர்வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழக அரசின் முறையான அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்று அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா ஆகியவை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுவிடும் விழா ஆகியவற்றை நடத்த அரசு அனுமதிக்கான ஆணை பெறப்படவில்லை. எனவே பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுவிடும் விழா ஆகியவற்றை எந்த இடத்திலும் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் சேவல் சண்டை, ரேக்லா பந்தயம் ஆகியவற்றையும் நடத்தக்கூடாது. கோவில் திருவிழா, பாரம்பரிய நிகழ்ச்சி என குறிப்பிட்டும் இவற்றை நடத்தக்கூடாது. இந்த எச்சரிக்கையை மீறி ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுவிடும் விழா, சேவல் சண்டை, ரேக்லா பந்தயம் ஆகியவை மாவட்டத்தின் எந்த பகுதியிலாவது நடத்தப்பட்டால் அதில் தொடர்புடையவர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.