தியேட்டரில் ‘சீட்’ பிடிப்பதில் தகராறு: மாணவர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய அஜித் ரசிகர் கைது


தியேட்டரில் ‘சீட்’ பிடிப்பதில் தகராறு: மாணவர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய அஜித் ரசிகர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2019 3:45 AM IST (Updated: 12 Jan 2019 7:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில், விஸ்வாசம் திரைப்படம் பார்க்க தியேட்டரில் ‘சீட்’ பிடிப்பதில் நடந்த தகராறில் மாணவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அஜித் ரசிகர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர், 

நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10–ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை 3.30 மணிக்கு ரசிகர் காட்சியாக திரையிடப்பட்டது. இதனை பார்க்க காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரசாத் (வயது 18), அவருடைய மாமா ரமேஷ் (30) ஆகியோர் வந்தனர். தியேட்டரில் ‘சீட்’ பிடிப்பது தொடர்பாக பிரசாத், ரமேசுக்கும், அஜித் ரசிகர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த 4 பேரில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாத், ரமேஷை சரமாரியாக குத்தினார். இதில் இருவரும் பலத்தகாயம் அடைந்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து அந்த 4 பேரும் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக வேலூர் காகிதப்பட்டறை மா.பா.சாரதி நகரை சேர்ந்த அஜித் ரசிகரான வெங்கட்ராமனை (30) கைது செய்தனர். வெங்கட்ராமன் மீது லாரியை வழிமறித்து கொள்ளையடித்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story