பிளாஸ்டிக் தடையால் மந்தாரை இலைகளுக்கு கடும் கிராக்கி மானிய விலையில் வழங்க பொதுமக்கள் கோரிக்கை


பிளாஸ்டிக் தடையால் மந்தாரை இலைகளுக்கு கடும் கிராக்கி மானிய விலையில் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2019 10:45 PM GMT (Updated: 12 Jan 2019 2:35 PM GMT)

பிளாஸ்டிக் தடையால் மந்தாரை இலைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் மானிய விலையில் மந்தாரை இலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர், 

வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் பாலாற்று படுகையில் அமைந்துள்ளது சின்னசேரி கிராமம். இங்கு 450 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றிலும் தென்னந்தோப்புகளும், கரும்பு தோட்டங்களும் உள்ளன. ஆண்கள் விவசாயம் மற்றும் கூலி வேலக்கு செல்கின்றனர். பெண்கள் 100 நாள் வேலைக்கும் செல்கின்றனர். அந்த பெண்கள் தவிர 200–க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்த பின்னர் மந்தாரை இலைகள் தைப்பதை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகளில் இருந்து மந்தாரை இலைகளை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி கொண்டு வேலூருக்கு வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் மந்தாரை இலைகளை வாங்கி வந்து மகளிர் குழு மற்றும் வீடுகளில் உள்ள பெண்களுக்கு ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

ஒரு கிலோ மந்தாரை இலைகளை கொண்டு 100 தைத்த இலைகள் தயார் செய்கின்றனர். ஒரு கட்டு ரூ.100 என வியாபாரிகள் வாரத்தில் 3 நாட்கள் கிராமத்திற்கு நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்களில் மந்தாரை இலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மந்தாரை இலைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.100–க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கட்டு தற்போது ரூ.130–க்கு விற்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் வீட்டு வேலைகளை செய்த பின் சுமார் 4 கட்டு இலைகளை தைத்து முடிக்கின்றார். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.200–ல் இருந்து ரூ.250 வரை லாபம் கிடைக்கிறது. இதனால் மந்தாரை இலைகளை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story