போளூர் அருகே பெண் கொலை: போலீஸ் துப்பறியும் மோப்ப நாய், கொலையாளியை கவ்வி பிடித்தது பரபரப்பு வாக்குமூலம்


போளூர் அருகே பெண் கொலை: போலீஸ் துப்பறியும் மோப்ப நாய், கொலையாளியை கவ்வி பிடித்தது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:45 AM IST (Updated: 12 Jan 2019 8:22 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே பெண் கொலையில் போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் 6 கி.மீ. தூரம் ஓடிச்சென்று கொலையாளியை கவ்வி பிடித்தது. அதை தொடர்ந்து கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

போளூர், 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கொரால்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரியாத்தை (வயது 40), விவசாயி. இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு அரிசாந்த் (12), பிரசன்னா (10) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் போளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சோத்துக்கண்ணி என்ற கிராமத்தின் எல்லையில் நிலம் உள்ளது. கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்த நேரம் தவிற விறகு வெட்டும் கூலி வேலையும் செய்து வந்தனர். நேற்று முன்தினம் விறகு வெட்டும் வேலைக்கு அரியாத்தை சென்றுவிட்டு பிற்பகல் 2.30 மணிக்கு வீடு திரும்பினார். பின்னர் மாலை 4 மணி அளவில் அவரது மனைவி சாந்தி நிலத்திற்கு சென்று மாட்டை பிடித்து கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

மாலை 5.30 மணி அளவில் அரியாத்தையின் சின்ன மாமனார் சக்திவேல், சாந்தியின் வீட்டிற்கு வந்து அரியாத்தையிடம், சாந்தியை யாரோ அடித்து கொலை செய்து வைக்கோல் போரில் போட்டு உள்ளதாக கூறியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தலையிலும், முகத்திலும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாந்தி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்–இன்ஸ்பெக்டர்கள் தயாளன், பாஷ்யம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போலீஸ் விசாரணையில், பக்கத்து நிலத்துக்காரரான அண்ணாமலை மகன் ஏழுமலைக்கும், எங்களுக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விராதம் உண்டு என்று அரியாத்தை கூறினார். பின்னர் போலீசார் ஏழுமலை குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட துப்பறியும் போலீஸ் மோப்ப நாய் ஜெர்சி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று மோப்பம் பிடித்து கொரால்பாக்கம் பஸ் நிலையத்தில் மறைந்து இருந்த ஏழுமலையை ‘கவ்வி’ பிடித்தது. இதனலா அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர் அசோக்குமார் வந்து தடயங்களை சேகரித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். போலீசாரிடம் ஏழுமலை கூறுகையில், ‘எங்கள் நிலத்திற்கும், அரியாத்தை நிலத்திற்கும் பொது பாதை உள்ளது. என் நிலத்தில் வளர்ந்து உள்ள முட்செடியால் பொது வழியே கரும்பு பாரம் ஏற்றி செல்லும் போது டிராக்டர், லாரி அரியாத்தை நிலத்தில் இறங்கி தான் செல்ல வேண்டும். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் உள்ளது. அரியாத்தை மனைவி சாந்தி என்னிடம் தகராறு செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கம்பால் அவரை தலையில் அடித்தேன். பின்னர் கருங்கல்லை தூக்கி வந்து தலை மீது போட்டு கொன்றேன் என்றார்.


Next Story