சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொட்டது ஒரு கிலோ 3,500 ரூபாய்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொட்டது ஒரு கிலோ 3,500 ரூபாய்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 9:14 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை நேற்று உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ 3,500 ரூபாய்க்கு விற்றது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தில் மலர்கள் விவசாயிகள் சங்கம் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களுடைய தோட்டத்தில் விளைந்த பூக்களை இங்கு விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.

வழக்கம்போல் நேற்றும் பூக்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,500 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த சீசனில் இதுதான் உச்சவிலை. இதேபோல் முல்லை ஒரு கிலோ ரூ.1,140-க்கும், காக்கடா ரூ.1,150-க்கும், செண்டு மல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.87-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.520-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தை விட நேற்று ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு 1,295 ரூபாய் விலை உயர்ந்தது. இதேபோல் முல்லைப்பூ ரூ.100-ம், காக்கடா ரூ.250-ம், ஜாதிமல்லி ரூ.250-ம், கனகாம்பரம் 10 ரூபாயும் விலை உயர்ந்தது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரேநாள்தான் இருப்பதாலும், கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் குறைந்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

Next Story