திம்பம் அடிவாரத்தில் தேங்கியிருந்த மழை தண்ணீரை குடித்த வயதான சிறுத்தை வாகனத்தில் வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர்
திம்பம் அடிவாரத்தில் தேங்கியிருந்த மழை தண்ணீரை வயதான சிறுத்தை ஒன்று குடித்தது. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அதை பார்த்து செல்போனில் படம் பிடித்தனர்.
சத்தியமங்கலம்,
தாளவாடியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது30), பழனிச்சாமி (35). இருவரும் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்கள். பண்ணாரியை தாண்டி திம்பம் மலைப்பாதையின் முதல் சுற்றுக்கு செல்லும் இடம் அருகே ஒரு சிறிய பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் ரமேசும், பழனிச்சாமியும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு சிறுத்தை மெதுவாக தள்ளாடியபடி பாலத்தின் அடிப்பகுதியில் நடந்து வந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் சற்று தூரமாக நின்று அதை கவனித்தார்கள்.
பார்ப்பதற்கு மிகவும் வயதானதுபோல் இருந்த அந்த சிறுத்தை அங்கும், இங்கும் பார்த்தது.
அப்போது பாறை பள்ளத்தில் தேங்கியிருந்த மழை தண்ணீரை அந்த சிறுத்தை குடித்தது. இதற்கிடைய சிறுத்தை நிற்பதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்க திரண்டார்கள்.
சிலர் செல்போனில் படம் பிடித்தார்கள். தேங்கியிருந்த மழை தண்ணீர் மிகவும் மாசுபட்டு காணப்பட்டது. அதை சிறுத்தை குடிக்கிறதே? என்று அனைவரும் விரட்டுவதற்காக சத்தம்போட்டார்கள்.
ஆனால் சிறுத்தை அதை கண்டு கொள்ளாமல் கலங்கிய நீரில் மிதந்த குப்பைகளை முகத்தால் தள்ளிவிட்டு மீண்டு தண்ணீரை குடித்தது.
அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து மெதுவாக தள்ளாடியபடி காட்டுக்குள் சென்றுவிட்டது. பண்ணாரி வனப்பகுதியில் மழை பெய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் வனக்குட்டைகள் வறண்டு விட்டன.
இதனால் தண்ணீரை தேடி விலங்குகள் காட்டைவிட்டு வெளியேற தொடங்கி உள்ளன. அதனால் வனத்துறையினர் வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story