மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கூலமேடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு ஆத்தூர் கூலமேட்டில் 18-ந் தேதி, கெங்கவல்லியில் 20-ந் தேதி, நாகியம்பட்டியில் 21-ந் தேதி, தம்மம்பட்டியில் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரும் பட்சத்தில் காவல்துறை அலுவலர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதேபோல பார்வையாளர்கள் அமரும் இடம், தகுதி சான்று மற்றும் அமரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தர நடவடிக்கை, மாடம் மற்றும் விளையாட்டு இடத்திற்கும் இடையே போதுமான இடைவெளி, பார்வையாளர்கள் வசதிக்காக வலுவான இரட்டைத் தடுப்பு வேலி அமைக்கும் பணி மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் காளைகளை சோதித்து சான்று செய்திடவும், சுகாதாரத்துறையினர் பங்கேற்பாளர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான டாக்டர்கள் மற்றும் மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்திடவும் வேண்டும். குடிநீர் மற்றும் சுகாதார வளாக வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் போதுமான அளவு இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் இருக்க மருந்துகளை தெளிக்க வேண்டும்.
காளைகள் கட்டும் இடங்களில் சிறுநீர் கழிவுகளை உடனுக்குடன் அகற்றி தூய்மையை சம்பந்தப்பட்டவர்கள் பராமரிக்க வேண்டும். விதிமுறைகள் கடைபிடிக்காவிடில் ஜல்லிக்கட்டு நடத்த சம்பந்தப்பட்ட உதவி கலெக்டரால் அனுமதி மறுக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர், மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பவும், ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் எத்தனை மாடுகள் கலந்து கொள்ளவேண்டும் என்பதை காவல்துறையும், உதவி கலெக்டரும் இணைந்து ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தை கணக்கீட்டு நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
அனுமதி பெற்று நடத்தும் ஜல்லிக்கட்டு அப்பகுதி உதவி கலெக்டர் மற்றும் உட்கோட்ட நடுவர் முன்னின்று அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
இதனிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் தங்கள் தரப்பு கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், இணை இயக்குனர் சத்தியா, துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை, உதவி கலெக்டர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story