கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 29 இடங்களில் புதிய செல்போன் கோபுரங்கள் பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவத்தவாடி, வேலம்பட்டி, வரட்டனப்பள்ளி உள்பட 29 இடங்களில் 3 ஜி சேவை கிடைக்கும் வகையில் புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று பி.எஸ்.என்.எல். மாவட்ட முதன்மை பொது மேலாளர் வெங்கட்டராமன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லட்சுமி புரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் சார்பில் கண்ணாடி இழை கேபிள் வழியாக இணையற்ற வேகத்தில் இணையதள சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தர்மபுரி தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர் வெங்கட்டராமன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் லட்சுமிபுரத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கோ-ஆப் காலனியில் உள்ள தனியார் வங்கி எதிரில் நிறைவடைந்தது.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நகரில் தற்போது கேபிள் ஆபாரேட்டர்களுடன் இணைந்து அதிவேக பி.எஸ்.என்.எல். கண்ணாடி இழை கேபிள் வழியாக இணையற்ற வேகத்தில் இணைதள சேவை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 750 ஜிபி டேட்டா இலவசத்துடன் மாத கட்டணமாக ரூ.1277-ம், 50 எம்பிபிஎஸ் வேகத்தில் 50 ஜி.பி டேட்டா இலவசத்துடன் மாத கட்டணமாக ரூ.777-ம் வசூலிக்கப்படும்.
இணையதள சேவை தடையின்றி அதிவேகத்தில் கிடைக்கும். தனியார் செல்போன் நிறுவனங்கள் உள்வரும் அழைப்புகளுக்கு மாத கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 10 ஆயிரம் புதிய சந்தாதாரர்கள் பி.எஸ்.என்.எல்.க்கு மாறி உள்ளனர். இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தரைவழி தொலைபேசி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காலப்போக்கில் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
தற்போது மீண்டும் தரைவழி தொலைபேசி இணைப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 3,500 பேர் தரைவழி தொலைபேசி இணைப்பை கடந்த ஆண்டில் பெற்றுள்ளனர். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவத்தவாடி, வேலம்பட்டி, வரட்டனப்பள்ளி உள்பட 29 இடங்களில் 3 ஜி சேவை கிடைக்கும் வகையில் புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது, துணை பொது மேலாளர்கள் ராதா, சாந்தி, கோட்ட பொறியாளர்கள் மகேஷ், ரமேஷ், சகாயராஜ், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story