மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மூதாட்டியின் உடலை புதைக்க முயற்சி திண்டுக்கல் அருகே பரபரப்பு


மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மூதாட்டியின் உடலை புதைக்க முயற்சி திண்டுக்கல் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 4:51 PM GMT)

மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மூதாட்டியின் உடலை புதைக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னிவாடி,

திண்டுக்கல் அருகே உள்ள புளியராஜக்காபட்டி காலனியை சேர்ந்தவர் முத்தன். அவருடைய மனைவி சுப்பம்மாள் (வயது 82). நேற்று முன்தினம் இவர் இறந்து விட்டார். இதனையடுத்து அவருடைய உறவினர்கள், சுப்பம்மாளின் உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

புளியராஜக்காபட்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. அந்த மயானம், போதிய பராமரிப்பு இன்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்து உள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இந்தநிலையில் சுப்பம்மாளின் உடலை அடக்கம் செய்ய இருப்பதால், மயானத்துக்கான பாதையை சீரமைத்து தருமாறு ஆக்கிரமிப்பாளர்களிடம் புளியராஜக்காபட்டி காலனி மக்கள் முறையிட்டனர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காலனி மக்கள், புளியராஜக்காபட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சுப்பம்மாளின் உடலை புதைக்க முடிவு செய்தனர்.

இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆபிரகாம் தலைமையில் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சுப்பம்மாளின் உடலை புதைப்பதற்காக பள்ளம் தோண்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு தாசில்தார் லட்சுமி, துணை தாசில்தார் முத்து முருகன், ரெட்டியாத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, துணை வட்டார அலுவலர் சாந்தி, திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மயானத்துக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும், மயானத்தில் மண்டிக்கிடக்கும் புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மயானத்தில் புதர்களை அகற்றும் பணி தொடங்கியது. மேலும் சுப்பம்மாளின் உடல் மயானத்தில் புதைக்கப்பட்டது. மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மூதாட்டியின் உடலை புதைக்க முயற்சித்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story