நத்தம் அருகே அய்யனார் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
நத்தம் அருகே அய்யனார் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
செந்துறை,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஆவிச்சிபட்டியில், அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி (குதிரை) எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு திருவிழா நடந்தது. அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு, திருவிழா நடத்துவதற்கான முயற்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த அய்யனார் சுவாமி, பெரியகருப்பு, சின்னகருப்பு, அம்மன், யானை, குதிரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சிலைகளை உடைத்து விட்டனர்.
நேற்று காலை அந்த வழியாக சென்ற கிராம மக்கள், சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஊர் அம்பலம் பம்பையன், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலைகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story