தேனி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


தேனி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

தேனி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைய உள்ள கல்லூரி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.

தேனி,


இந்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. தேனி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடங்கி உள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் கடந்த தேர்தலின் போது தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி வருகிற தேர்தலுக்கும் வாக்கு எண்ணும் மையமாக இதே கல்லூரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அங்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சட்டமன்ற தொகுதி வாரியாக கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் அறைகள், வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ள அறைகளை பார்வையிட்டார். அங்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராம்பிரதீபன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரித்தா, தேனி தாசில்தார் சத்தியபாமா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story