மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பண்ணவாடி கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிகிறது


மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பண்ணவாடி கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிகிறது
x
தினத்தந்தி 12 Jan 2019 9:45 PM GMT (Updated: 12 Jan 2019 5:20 PM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், அணையின் நீர்தேக்கப் பகுதியான பண்ண வாடியில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் தற்போது வெளியே தெரிகிறது.

கொளத்தூர், 

மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் அதன் நீர்தேக்கப் பகுதிகளில் சாம்பள்ளி, புதுவேலமங்கலம், காவேரிபுரம், கோட்டையூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் இருந்தன. இந்த நிலையில் மேட்டூர் அணை கட்ட தொடங்கியதும் அந்த கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அப்போது காவேரிபுரம் என்ற கிராமத்தில் இருத்த ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் அந்த கோவிலின் முகப்பில் இருந்த நந்தி சிலை, கோட்டையூரில் இருந்த ராஜாகோட்டை, புதுவேலமங்கலத்தில் இருந்த வீரபத்ரன் கோவில், பண்ணவாடியில் இருந்த கிறிஸ்தவ ஆலய இரட்டை கோபுரங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டு விட்டு அவர்கள் வெளியேறினர். பின் அந்த கிராமங்களுடன் சேர்ந்து அந்த வழிபாட்டு தலங்களும் மேட்டூர் அணை நீரில் மூழ்கின.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக குறையும்போது கிறிஸ்தவ ஆலய கோபுரமும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடியாக குறையும்போது நந்தி சிலையும் வெளியே தெரிவது வழக்கம்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 76.30 அடியாக குறைந்ததால் பண்ணவாடி நீர்தேக்கப் பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ கோபுரம் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த புராதன நினைவு சின்னத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து போவதால் தற்போது பண்ணவாடி பரிசல்துறை சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

Next Story