ஓமலூர் அருகே, ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு 5 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்


ஓமலூர் அருகே, ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு 5 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jan 2019 9:30 PM GMT (Updated: 12 Jan 2019 5:23 PM GMT)

ஓமலூர் அருகே வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 5¼ டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓமலூர், 

ஓமலூரை அடுத்த காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிபாடி, சர்க்கரை செட்டிபட்டி, நாலுகால்பாலம், தும்பிபாடி ஒட்டதெரு உள்ளிட்ட ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிக்க கரும்பு பாலுடன் வெள்ளை சர்க்கரை கலந்தும், உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்தும் வெல்லம் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும் கரும்பு பால் பாதி, வெள்ளை சர்க்கரை பாதி என கலந்து வெல்லம் தயாரிப்பதால் கரும்பு தேவை குறைவதால் கரும்பின் விலை மிக குறைந்து டன் 1,500-க்கு கூட விலை போவதில்லை எனவும், வெல்லம் தயாரிக்க சர்க்கரை கலப்பதை தடுத்தால்தான் கரும்பு கட்டுபடியான விலை கிடைக்கும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஓமலூர் காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் மும்மரமாக வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், வெல்லம் தயாரிப்பு பணியில் தொடர்ந்து வெள்ளை சர்க்கரை மற்றும் ரசாயன உரம் கலப்பதாகவும் தகவல் வந்தது.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசந்திரன், சுந்தரராஜன், சிவலிங்கம், சிவவண்முகம், மாரியப்பன், சுருளி, சிங்காரவேல், இளங்கோவன் ஆகியோர் 8 குழுக்களாக காமலாபுரம், பொட்டியபுரம் ஒட்டதெரு, நாலுகால்பாலம் சுற்று வட்டார பகுதிகளில் தனித்தனியாக ஆய்வு செய்தனர். மொத்தம் 48 கரும்பு ஆலைகளில் ஆய்வு செய்தனர்.

இதில் பாஸ்கர், பிரசன்னா, முருகேசன் ஆகியோரின் கரும்பு ஆலைகளில் கலப்படத்துக்காக வைத்திருந்த 5¼ டன் வெள்ளை சர்க்கரை மற்றும் 5¼ டன் கலப்பட வெல்லம், 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் என ரூ.3.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story